கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மருங்கூர் மற்றும் காவனூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனித்தனியே இரண்டு பெரிய ஏரிகள் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் இந்த ஏரிகளில் நீர் பிடிப்பதன் மூலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இவ்விரண்டு ஏரிகள் விளங்குகின்றன.
அவ்வாறு உள்ள மருங்கூர் மற்றும் காவனூர் ஏரிகளின் நடுவே சுமார் 40 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி, அதிலிருந்து கிணறு அமைப்பில் கான்கீரிட் மூலம் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. மழைநீர் சேகரிப்புக்காக கட்டுகின்றனர் என்று பொதுமக்கள் அலட்சியமாக இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் இந்திய எரிவாயு கழகத்தின் மூலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக பெரிய கிணறு அமைக்கின்றனர் என்று அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மருங்கூர், காவனூர், கீரணூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள், கிணறு வெட்டும் பணியை நிறுத்த ஒன்று கூடினர். அப்போது மருங்கூர் கிராமத்தின் வழியாக கிணறு அமைக்கும் பணிக்கு தேவையான ஜல்லியை கொண்டு சென்ற லாரியை மடக்கி சிறைப்பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏரியில் கட்டப்படும் கிணற்று பணியை தடுத்து நிறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவி வருகிறது
.