சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தமிழ் மாநில காங். கட்சியின் சிதம்பரம் நகர தலைவருமான ரஜினிகாந்த் தமிழ்நாடு முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘சிதம்பரம் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் திட்ட அறிக்கையின்படி நகராட்சிக்கு சொந்தமான சுத்திகரிப்பு பண்ணையில் சுத்திகரிக்கப்பட்டு பின் அப்பகுதியில் உள்ள நகராட்சி புல் பண்ணைகளுக்கு தண்ணீர் பரவச் செய்வது என்பதுதான் திட்ட அறிக்கை. தற்போது லால்புரம் பாதாள சாக்கடை கழிவுநீர் சேகரிக்கும் இடத்திலிருந்து நேரடியாக அருகிலுள்ள பாசிமுத்தான் ஓடை, சிவகாமசுந்தரி ஓடையில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் இந்த வாய்க்காலின் கிழக்குப் பகுதி பாசன வாய்க்கால் மூலம் தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, மடுவங்கரை, குண்டுமேடு தில்லைவிடங்கன், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுவம் பட்டு, நஞ்ச மகத்து வாழ்க்கை, புஞ்சமகத்து வாழ்க்கை, மானம்பாடி, கீழச்சாவடி போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுவதும் பாதிப்படைகின்றன. ஏற்கனவே இந்தப் பகுதியானது வெள்ளாற்றின் மூலம் உப்புநீர் சூழந்து நிலத்தடி நீர் உப்புத் தன்மை ஏற்பட்டு குடிநீர் பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளது. நீண்டநாள் கோரிக்கையாக தடுப்பனை வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுப்பணித்துறை மூலமாக பி ஆதிவராக நல்லூரில் அதற்கான வேலை துவங்கும் நிலையில் உள்ளது. கிழக்கு பகுதி கிராமங்களைக் கணக்கில் கொள்ளாமல் மேற்கு பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் கடலின் உப்புநீர் உள்நுழையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தக் கழிவுநீர் கலப்பதால் மீண்டும் நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீருக்கு மோசமான பஞ்சம் ஏற்படுகின்ற நிலை ஏற்படும். இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளும் முதல்வர் அவர்கள் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.’ இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.