கோவை, கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன்(35). இவர், பாம்பு பிடி வீரராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி, பள்ளி படிக்கும் மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு காளப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்த தகவல் செல்போன் மூலம், முரளிதரனுக்கு கிடைத்துள்ளது. தகவலின் பேரில் முரளிதரன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, ஒர்க் ஷாப்பிலிருந்த மேஜை அடியில் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது. இதைப்பார்த்த முரளிதரன், அதிக விஷம் கொண்ட பாம்பை லாவகமாகப் பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாகப் பாம்பு முரளிதரனை காலில் கடித்துள்ளது. இருந்தபோதும், பிடித்த பாம்பின் பிடியை விடாமல் அதனை பைக்குள் அடைத்துத் தூக்கிச் செல்ல முரளிதரன் முயன்றுள்ளார். அப்போது, திடீரென கீழே நிலை தடுமாறி முரளிதரன் விழுந்துள்ளார். அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவசர ஊர்திக்குத் தகவல் அளித்தனர். ஆனால், அவசர ஊர்தி வருவதற்குள் முரளிதரன் பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலேயே முரளிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார் உயிரிழந்த முரளிதரனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முறையாக வனத்துறையினரிடம் தகவல் அளித்து பாம்பு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனியாக யாருக்கேனும் அழைப்பு வரும்போது சம்பந்தப்பட்ட பாம்பு பிடி வீரர், முறையாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படும் நிலையில், முறையான அனுமதிப் பெற்று தான் பாம்பு பிடிக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பாம்பு கடித்து, பாம்பு பிடி வீரர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.