மாதவரம் பால் பண்ணையிலிருந்து வடசென்னை பகுதிகளுக்கு ஆவின் பால் விநியோகம் தாமதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஆவின் பால் பாக்கெட்டுகள் வடசென்னை பகுதிகளான கொரட்டூர், பெரம்பூர், வியாசர்பாடி, மணலி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமல்லாது புரசைவாக்கம், ஓட்டேரி, சூளை, பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதிகளுக்கு பால் விநியோகம் தாமதப்படுவதாக புகார்கள் எழுந்தது.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 5 மணி நிலவரப்படி 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியே செல்லாமல் காலதாமதம் ஏற்பட்டது. பால்பாக்கெட்டுகளை வண்டியில் ஏற்றுவதற்கான பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணி அளவில் வடசென்னை பகுதிகளில் பால் விநியோகம் செய்ய வாகனங்கள் கிளம்பும். அதிகாலை 4 மணிக்கு வாகனங்கள் அந்த பகுதிகளை சென்றடையும். ஆனால் தற்பொழுது வாகனங்கள் கிளம்பாத சூழல் ஏற்பட்டுள்ளது.