Skip to main content

‘வீட்ல திட்டுவாங்க’ - பள்ளியில் சானிடைசரை குடித்த மாணவிகள்; கோவையில் பரபரப்பு

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

Shocked by the action of the students in Coimbatore

 

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிகள் இருவர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில், நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டது.

 

இரு மாணவிகளும் சில பாடங்களில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால் வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள் எனப் பயந்துள்ளனர். இதனால் இரு மாணவிகளும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 

 

அதன்படி இரு மாணவிகளும் தங்கள் வீடுகளில் இருந்த சானிடைசரை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். பள்ளியில் சானிடைசரை குடிநீரில் கலந்து குடித்துள்ளனர். இதனால் சிறிது நேரத்திற்குள் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரையும் கண்ட ஆசிரியர்கள் மாணவிகளிடம் என்ன என்று கேட்டதற்கு தாங்கள் செய்ததைக் கூறியுள்ளார்கள்.

 

இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளது. பின் இரு மாணவிகளும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த சூலூர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கோவையில் இன்று பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
PM Modi's 'Road Show' in Coimbatore today

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன்  4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வரவிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5:30 மணிக்கு கோவை வருகிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார். கோவை - மேட்டுபாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, மாலை 5:45 மணியளவில் ரோடு ஷோவை தொடங்கும் பிரதமர் மோடி, ஆர்.எஸ். புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார். பிரதமர் மோடியின் வருகையொட்டி, கோவையில் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.