தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மயிலாடுதுறை மக்களையோ டெங்குவுடன் பாதாள சாக்கடைகளின் உடைப்புகளும் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளும் மக்களை பாடாய்பட வைத்திருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பாதாளசாக்கடை திட்டம் செயல்பட்டுவருகிறது. அந்த திட்டம் துவங்கப்பட்ட போதே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, நகரத்தில் முக்கிய வீதிகளில் தொடர்ந்து உடைந்து உள்வாங்கி வருகிறது.
நாகை சாலை, திருவாரூர் சாலை என முக்கிய சாலைகளில் இருபது அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் ஏற்படுவது தொடர்கதையாகவே மாறிவிட்டது. பதிமூன்றாவது முறையாக பள்ளம் ஏற்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அதே வேலையில் மக்கள் அதிகம் வசிக்கும், போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் ஆள் நுழையும் தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. அதில் கலக்கும் கழிவுநீர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அப்பகுதியிலுள்ள குளங்களில் கலந்துவருகிறது. மக்கள் பயன்படுத்திவந்த குளத்தில் தற்போது தண்ணீர் சாக்கடை நீராகமாறி துர்நாற்றம் வீசுவதும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுமாக இருந்துவருகிறது.
மேலும் " இங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுவிட்டது. அந்த பகுதியில் நிரந்தரமாக மக்கள் பயன்படுத்திய குளங்கள் முழுவதும் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை தமிழ்நாடு அரசு பாதாள சாக்கடையை மீண்டும் புனரமைப்பு செய்ய வேண்டும்," என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.