தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொது இடங்கள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
தீபாவளி அன்று(12.11.2023) காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்; தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும், எஸ்.ஐ. தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை சென்னை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.