Skip to main content

ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி மீண்டும் மனுத்தாக்கல்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Senthil Balaji again petitioned for bail

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது.

 

அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அவருடைய காவல் அக்.13 ஆம் தேதி வரை மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு மறுவிசாரணை அக்.31 ஆம் தேதிக்கு வர இருக்கிறது.

 

நேற்று புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு நேற்று மாலையே மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது.  இந்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்த நிலையில், நாளை இந்த மனு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

 

ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்