சென்னை உள்ளிட்ட பல பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளின் படியில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகும். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தனியார் பேருந்து மேற்கூரையில் வரம்பை மீறி பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பயணிக்க போதிய அளவில் பேருந்து வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வரும் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி அரசு அந்த பகுதியில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.