
ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியை சேர்ந்தவர் மாணவர் பொன்.சிவவேல். இவர் சிவகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பொன்.சிவவேலுக்கு லேப்டாப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம். இதற்காக பெற்றோர் செலவுக்கு கொடுக்கும் பணம் மற்றும் உறவினர்கள் தரும் பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளார்.
லேப்டாப் ஆசையை போல், சிவவேலுக்கு இயற்கை விவசாயத்திலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதற்காக மாடு வாங்கி வளர்க்கவும் ஆசை இருந்துள்ளது. பெற்றோர் கொடுத்த பணம் ஒரளவு சேர்ந்ததையடுத்து, லேப்டாப் வாங்கலாமா அல்லது மாடு வாங்கலாமா என யோசித்த மாணவர் சிவவேல்.
மாடு வாங்கியே வளர்க்கலாம் என முடுவு எடுத்துள்ளார். இதையடுத்து, பெற்றோரிடம் தனது விருப்பத்தை தெரிவித்த மாணவன் அவர்களை அழைத்துக்கொண்டு கடந்த 1ம் தேதி காங்கயம் மாடுகள் சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு காங்கயம் இன கன்றுக்குட்டிகள் ஆரம்ப விலையே ரூ.30 ஆயிரம் வந்துள்ளது. ஆனால் சிவவேல் கையில் ரூ.19 ஆயிரமே இருந்துள்ளது. இதையடுத்து, கன்று வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார் மாணவர் சிவவேல்.
இந்நிலையில், சிறுவனின் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட சந்தை ஏற்பாட்டாளர்கள், ஜூலை 8ம் தேதி நடைபெற்ற சந்தைக்கு மாணவன் பொன்.சிவவேலை அழைத்துள்ளனர். மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ரூ.13 ஆயிரத்தை அந்த சிறுவனிடம் கொடுத்துள்ளனர்.
உற்சாகமான பொன்.சிவவேல், அத்துடன் தான் வைத்திருந்த ரூ.19 ஆயிரத்தை சேர்த்து ரூ.32 ஆயிரத்துக்கு காங்கயம் இன கன்றுக்குட்டியை வாங்கிச் சென்றுள்ளான். பள்ளிச் சிறுவனின் மாடு வளர்க்கும் இந்த ஆர்வம் இப்பகுதி விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.