முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியருமான இருந்த முரசொலி செல்வம் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரசொலி செல்வம் உயிரிழந்தார்.
கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். திமுகவின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, முரசொலி செல்வத்தின் உடலை கட்டியணைத்துக் கதறி அழுதார்.
இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு உடலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் முரசொலி செல்வத்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.