நாடு முழுவதும் இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 மணிக்கு நீட் நுழைவுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்தது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. இரண்டு முறை தேர்வெழுதியும் தேர்ச்சிப் பெற முடியாத அளவுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் நம்பிக்கை நட்சத்திரங்களின் தற்கொலைக்கு காரணமாக அமைகிறது. நீட் மோசடிகளும், மாணவர்களின் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை சட்டப்பேரவையில் நிறைவேறும். நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும் வரை நமது சட்ட ரீதியான போராட்டம் தொடரும். மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறந்த எதிர்காலத்தை அமைத்து தரும் பொறுப்பு, கடமை அரசுக்கு இருக்கிறது; மாணவர்கள் மனம் தளர வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கூழையூரில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், மாணவரின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.