Skip to main content

போலீசார் தாக்கியதாக வதந்தி பரப்பிய மின்வாரிய ஊழியர் அதிரடியாக சஸ்பெண்ட் !

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்ததை அறிந்த பெண்ணின் கணவர் அடித்து உதைத்தை மறைத்து,காவல்துறையினர் தாக்கியதாக வதந்தி பரப்பிய மின்வாரிய ஊழியர் அதிரடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் நேரு நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (48). இவர் மேட்டூர் சுரங்க மின்நிலையத்தில் முதல்நிலை மின்னியல் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய மின் விநியோகம் இருப்பதால், பழனிசாமி தினமும் வேலைக்குச் சென்று வந்தார்.
 

salem district mattur dam police electricity board employee whatsapp

 

கடந்த மார்ச் 31ம் தேதி, வழக்கம்போல் பணிக்குச் சென்ற பழனிசாமி, பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு மதியம் உணவு அருந்த வீட்டிற்குச் சென்றார். அப்போது அவருடைய முதுகில் பெல்ட் மற்றும் லட்டியால் அடித்தது போன்று பலத்த காயங்கள் இருந்ததைப் பார்த்து, அவருடைய மனைவியும்,மகன்களும் விசாரித்துள்ளனர்.பணி முடிந்து வந்து கொண்டிருந்தபோது சாலையில் காவல்துறையினர் தன்னை தாக்கிவிட்டதாகக் கூறி சமாளித்துள்ளார்.

மின்வாரிய அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் விசாரித்தபோதும், மேட்டூர் சதுரங்காடி அருகே வந்தபோது அங்குப் பணியில் இருந்த காவல்துறையினர் தன்னை வழிமறித்து தடியால் தாக்கியதாகவும், அடையாள அட்டையைக் காட்டியபோதும் தன்னை அடித்து உதைத்தனர் என்றும் கூறியுள்ளார். 

இதனால் கொதிப்படைந்த மின்வாரிய ஊழியர்கள்,இதுகுறித்து மேட்டூர் டிஎஸ்பி சவுந்திரராஜனிடம் புகார் அளித்தனர்.இதுகுறித்து மின்வாரியத் தலைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதோடு, டிஜிபி வரை புகார் அளித்தனர். 


இதுகுறித்து பழனிசாமியின் படங்களுடன் கூடிய தகவல்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரவின.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். மின்வாரிய ஊழியர் பழனிசாமி சம்பவம் நடந்ததாகக் கூறிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அவர் கூறியது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்பதும், அவர் சொன்னது அப்பட்டமான பொய் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் பழனிசாமியைத் தனியாக அழைத்துச்சென்று காவல்துறையினர் விசாரித்தபோது, பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

பழனிசாமி, தான் பணியாற்றி வரும் அலுவலகத்தில் பழகுநர் பயிற்சிக்காக வந்த 22 வயதான திருமணமான பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.அடிக்கடி தனிமையில் சந்தித்து 'நெருக்கமாக' இருந்துள்ளனர்.இதையறிந்த அப்பெண்ணின் கணவர், அவர்களைக் கண்டித்துள்ளார்.ஒரு கட்டத்தில், அந்தப் பெண் பழனிசாமியைச் சந்திப்பதையே தவிர்த்து வந்தபோதும், அவரை பழனிசாமி அடிக்கடி' அழைத்துள்ளார்'.

இந்நிலையில்தான், மார்ச் 31ம் தேதியன்று, பழனிசாமி பணி முடிந்து வீடு திரும்புகையில், அந்தப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த அப்பெண்ணின் கணவர், பழனிசாமியைச் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். 

தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணின் கணவரிடம் அடி, உதை வாங்கியதாக நாலு பேருக்குத் தெரிய வந்தால் அவமானமாகப் போய்விடும் என்பதால், காவல்துறையினர் தாக்கிவிட்டதாகக் கதை ஜோடித்துள்ளார். இதையெல்லாம் காவல்துறையினர் எங்கே கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று அசட்டையாக சரடு விட்டுள்ளார்.ஆனால், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவருடைய குட்டு வெளிப்பட்டது. 

 

 

இதையடுத்து, காவல்துறையினர் அளித்த அறிக்கையின்பேரில், மின்வாரிய உயரதிகாரிகள் பழனிசாமியை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்