சேலத்தில், தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (பிப். 24) திறந்து வைத்து, பார்வையிட்டார். புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் இக்கண்காட்சி திறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை இப்புகைப்படக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
செய்தி மக்கள் தொடர்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வேளாண்மை, தோட்டக்கலை, காவல்துறை, கால்நடை பராமரிப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவு, வருவாய், சமூகநலம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள், மேம்பாட்டுப்பணிகள் குறித்த புகைப்படங்கள், விளக்கங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
விழாவின் ஒரு பகுதியாக, சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு 3.57 கோடி மதிப்பிலான 64 இலகுரக வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், எம்எல்ஏக்கள் செம்மலை, சக்திவேல், ராஜா, வெற்றிவேல், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி ஆணையர் சதீஸ், சேலம் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.