சேலத்தில் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த மூன்று திருநங்கைகள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் கூட்டாதிரிபுரம் குறவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (52). லாரி ஓட்டுநர். திங்கள்கிழமை (அக். 21) இரவு 11 மணியளவில், சேலம் அம்மாபேட்டை காவல் சரகத்திற்கு உள்பட்ட சேலம் & சென்னை முதன்மைச் சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகே, சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திருநங்கைகளான சுருதிகா (19) என்கிற சுரேஷ், சஞ்சனா (20) என்கிற சந்துரு, நைனிகா (23) என்கிற சத்யா ஆகிய மூன்று பேரும் லாரி ஓட்டுநரிடம் உல்லாசமாக இருந்துள்ளனர். அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டதோடு, லாரி ஓட்டுநர் சட்டைப் பையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயையும் மிரட்டிப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் சுப்பிரமணி, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அம்மாபேட்டையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மேற்படி மூன்று திருநங்கைகளையும், செவ்வாய்க்கிழமை (அக். 22) கைது செய்தனர். விசாரணையில், உடையாப்பட்டி கோயில்மேட்டைச் சேர்ந்த முத்துசாமி மகன் திருமுருகன் (36) என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.