சென்னையில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் பிறந்த குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சந்திரசேகரன் அதே மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் சென்னை தி நகரில் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வரை குழந்தையைக் காப்பகத்தில் வைத்து பராமரித்துக் கொள்ளலாம் என்று கார் ஓட்டுநர் சந்திரசேகர் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
அதன் பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை சந்திரசேகரன் விற்றதோடு, மற்றொருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் புகார் அளித்ததின் பேரில் கார் ஓட்டுநர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த மதபோதகர் பிரான்சிஸ், ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் குழந்தைகள் விற்பனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.