புதுச்சேரி காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் செல்வம். தற்போது போலீஸ் தலைமையகம் காவல் கண்காணிப்பாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பதவி உயர்வுக்கு முன்னதாக பெரியகடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது ஒரு போக்சோ வழக்கை சரியான முறையில் விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த நீதிபதி, செல்வம் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் டி,ஜி.பி பாலாஜி ஸ்ரீவஸ்தவா வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதன் பேரில் செல்வம் மீது 409 ( அரசுக்கு எதிராக நம்பிக்கை மோசடி) பிரிவின்கீழ் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்த அன்று போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உடல்நிலை சரியில்லை என்று கூறி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
வழக்கை சரியாக விசாரிக்காமல் அலட்சியமாக கிடப்பில் போட்டதற்காக காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.