
தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் தலைமை இன்று (21/06/2022) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான வதந்திகளைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.