நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட, வெளி மாநில நெல்லை கொள்முதல் செய்வதாக கண்டித்து விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டார்களை பயன்படுத்தி பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்கள் கோடை சாகுபடியாக செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடை முடிந்துவிட்ட நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தேவையான இடங்களில் மட்டும் இல்லாமல் சாகுபடி நடைபெறாத பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. சாகுபடியே நடக்காத இடங்களிலும், அறுவடை முடிந்து பல மாதங்களான பகுதிகளிலும்கூட நாள்தோறும் 500 மூட்டைகளுக்கு மேலாக நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
சாகுபடியே நடைபெறாத பகுதிகளிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு முட்டைகளை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். அதனை கண்டித்து திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை இல்லை, இந்த நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.