அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. சி.இ.ஜி, உள்ளிட்ட வளாகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடமாக அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளதற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் த.கணேசன் கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள 4 ஆம் தொழிற்நுட்பப் புரட்சிக்கு ஏற்ப இந்திய பொறியியல் கல்லூரிகளும், மாணவர்களும் தரமாக இல்லை என்று கார்ப்பரேட் முதலாளிகள் கூக்குரலிடுகிறார்கள். அதற்கு தலைவணங்கி மோடி அரசு தரத்தை உத்தரவாதப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அகில இந்திய அளவில் நீட் போன்ற கடுமையான நுழைவுத்தேர்வுகள், படிப்பை முடித்தபின் எக்ஸிக் எனும் தகுதி தேர்வுகள், ஏ.அய்.சி.டி.இ, யூ,ஜி.சி போன்ற உயர்க்கல்வி அமைப்புகளை கலைக்கவும், புதிதாக உயர்க்கல்வி ஆணையத்தையும் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது.. இன்னொரு பக்கம் அறிவியலுக்கு புறம்பான வேதத்தையும், புராண கட்டுக்கதைகளையும் திணித்து வருகிறது.
ஏ.அய்.சி.டி.இ யின் சுற்றறிக்கையை மேலோட்டமாக பார்க்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 2014 ஆம் ஆண்டு முதல் கல்வி, கலாச்சார துறையில் சமஸ்கிருதத்தையும், பார்ப்பனிய பண்பாட்டையும் புகுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உத்தவின் பேரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி ஒரு குழு அமைத்து சமஸ்கிருதத்தையும், வேதங்களையும் வளர்ப்பதற்கும், அதிலுள்ள அறிவியல் தொழிற்நுட்பம் சார்ந்த கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கும் 10 ஆண்டுகள் திட்டம் ஒன்றை தயாரித்தது.
அதேபோல், 2016 ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்துக்கொடுத்த டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் குழு பரிந்துரையில் இந்த விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நீண்டகால திட்டத்தின் அடிப்படையில்தான் மத்திய மோடி அரசு ஐ.ஐ.டி, பொறியியல் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் சமஸ்கிருதத்தையும், வேத, புராணங்களையும் புகுத்தி வருகிறது. இவைகளை நிறைவேற்றத்தான் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தான் அண்ணா பல்கலைக்கழ துணைவேந்தர் சூரப்பா. இன்று பகவத்கீதையையும், வேதத்தையும் பாடத்திட்டமாக வைப்பவர்கள், நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களை வேலைக்கும் அமர்த்துவார்கள். இந்த திட்டம் வெற்றிபெற்றால் நாளை மருத்துவம், கலை / அறிவியல் உள்ளிட்டவைகளிலும் இதையே அமுல்படுத்துவார்கள்.
அரசு அலுவகங்களில் மத அடையாளங்களோ, மத வழிபாட்டு நிகழ்ச்சிகளோ நடத்தக்கூடாது. இது அனைவருக்கும் பொதுவான அரசு, அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அணை வெளியிட்டார். ஆனால் அவர் பெயரால் நடைபெறக்கூடிய பொறியியல் கல்லூரிகளில் தற்போது பகவத்கீதை விருப்ப படமாக இணைத்து இழிவு படுத்தியுள்ளார். தமிழக மாணவர் அமைப்புகளும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களுடன் இணைந்து பகவத்கீதை பாடத்திணிப்பை முறியடிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.