தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்த நிலையில், அதனைக் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படவுள்ளதாகத் தகவல் பரவியது. தற்போது தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவி வருவதால், அதனைச் சமாளிப்பதற்கு, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 இருந்து 62 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றி தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் பரவியது.
இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழக அரசு இதுதொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 62 ஆக உயர்த்தப்படும் என்று பரவும் தகவல் வெறும் வதந்தியே என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது.