தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் விளக்கமளித்துவருகின்றனர்.
அந்த வகையில், இன்றைய விவாதத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், மதிமுக, விசிக, தவாக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், "உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். வேளாண் சட்ட சந்தேகங்களுக்கு மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும்" என்றார்.