அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி நிர்வாகக் குளறுபடிகளும், நிர்வாகிகள் சிலருடைய சுயநலமும்தான், கல்வித்துறை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு, பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை அழைப்பதற்குக் காரணமாக அமைந்தது. இதே கல்லூரியில், தற்போது இன்னொரு விவகாரம் வெடித்திருக்கிறது.
அருப்புக்கோட்டையில் மூன்று மிராசு உறவின்முறைக்குப் பாத்தியப்பட்டது தேவாங்கர் கலைக்கல்லூரி. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகளை மாற்றியமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ராமசாமி என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.
“தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்குவதற்குப் பணம் வாங்குகிறார் ராமசாமி. என்னிடமும் ரூ.5 லட்சம் வரை வாங்கினார். ஆனால், சொன்னபடி போஸ்டிங் போடவில்லை.” என்று தொடர்ந்து ராமசாமி மீது புகார் கூறி வருகிறார் காசாளர் தனலட்சுமி. இந்த விவகாரத்தில், அலுவலகப் பணியாளர்கள் 4 பேர், மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக நேற்று மிரட்டினர்.
இந்தப் போராட்டம் குறித்து அறிந்த மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அம்பலவாணன் இன்று கல்லூரிக்கு வந்தார். அப்போது, முன்னாள் செயலாளர் சவுண்டையன் தரப்பும், தற்போதைய செயலாளர் ராமசாமி தரப்பும் தகராறு செய்தனர். அம்பலவாணன் முன்னிலையிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பில், காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
நியாயம் கிடைக்கும்வரையிலும் போராட்டத்தைத் தொடர்வோம் என்று கல்லூரி வளாகத்தில் கோஷம் எழுப்பிய வண்ணம் உள்ளனர். பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள் போராட்டத்தின் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.