நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவுடன் இன்று (28.01.2024) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது . திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றனர். இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் 21 மக்களவை தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
கடந்த முறை போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன் புதியதாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென்சென்னை, அரக்கோணம் ஆகிய 21 தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக பட்டியல் ஒன்று வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் போபண்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தொகுதிப் பங்கீடு தொடர்பான திமுக உடனான காங்கிரஸ் மேல்நிலை குழு பேச்சுவார்த்தை நடத்தியது திருப்திகரமாக இருந்ததாக கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளதோடு, திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.