ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள்,திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “ராஜேந்திர சோழன் வாழ்ந்ததற்கு அவர் கட்டிய கோயில், குளம், செப்பேடுகள், சிற்பங்கள் இருக்கிறது. அதனை ஆதாரப்பூர்வாக வைத்து ராஜேந்திர சோழனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ராஜேந்திர சோழனுக்கு 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. ஆனால், ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது. ராமன் பற்றிப் பேசுபவர்களே அவதாரம் என்றுதான் குறிப்பிடுவார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாகப் பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. எனவே நம்மை மயக்கி, நம்முடைய வரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்கான வாய்ப்பாகத் தான் இதையெல்லாம் செய்கிறார்கள்” எனப் பேசினார்.
அன்மையில் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கம்பன் திருவிழா நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ‛‛திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம்'” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.