இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.
இந்த நிலையில், ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 இன்று (06-01-24) மாலை 4 மணிக்கு சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. முன்னதாக உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்து அடுத்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளாதவது, “சூரியனை ஆய்வு செய்ய எல் 1 புள்ளியை வெற்றிகரமாக சென்றடைந்த ஆதித்யா எல் 1 விண்கலம் இந்திய அறிவியலாளர்களின் சாதனை ஈடு இணையற்றது
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் நாள் பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாள் பயணத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல் 1 புள்ளியை அடைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இதற்கு காரணமான இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவை வென்ற நமது அறிவியலாளர்கள் இப்போது ஆதித்யா எல் 1 திட்டத்தின் மூலம் சூரியனை நெருங்கியுள்ளனர். சூரியன் குறித்த உண்மைகளும் இனி நமக்கு புலப்படும். வானத்தையும், நிலவையும் வசப்படுத்திய நாம், இனி சூரியனையும் சொந்தமாக்கிக் கொள்வோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.