கோவில்பட்டி அருகே வெம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் 100 சதவீதம் போராட்டமே கூடாது என ரஜினி கூறவில்லை என்பதே எனது கருத்து. மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியமானதுதான். இதை யாரும் மறுக்கவில்லை. மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டம் தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் அளவிற்கு கொண்டு சென்றது.
நியாயத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்திய மக்களை குற்றவாளிகள், சமூக விரோதிகள் என அரசே கூறுவதை அனுமதிக்க முடியாது. தூத்துக்குடி சம்பவம் குறித்து கைது செய்யபட்ட அனைவரையும் விடுவிப்பதோடு அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு இந்தியாவில் உள்ள எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் பிரதமர் மோடி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது மாற்றன் தாய் மனப்பான்மையை காட்டுகிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படாத நிலையே உள்ளது. அரசு மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஊட்ட நினைத்தால் அமைச்சரவையைக் கூட்டி ஆலையை நிரந்தரமாக மூடிட தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும். மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு தேவையானவற்றை வாதாடிப் பெறுவதை விட, அவர்கள் தருவதைப் பெறும் அரசாகவே தற்போதைய அரசு உள்ளது.