
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று (24-02-25) தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய அண்ணன் மகளான தீபா, விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில், அதிமுக நிர்வாகி புகழேந்தி உள்பட பலரும் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனிலில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அங்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன், அதிமுக நிர்வாகி உடன் இருந்து ரஜினிகாந்திற்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், “இதோடு 4வது முறையாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வந்திருக்கிறேன். நானும், ஜெயலலிதாவும் சேர்ந்து ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அப்போது என்னை பார்க்க வேண்டும் என்று கேட்டார். அப்போது இங்கு வந்தேன்.
இரண்டாவது முறையாக ராகவேந்திரா கல்யாண மண்டப திறப்பு விழாவிற்கு அழைப்பதற்காக வந்தேன். என் மகளுடைய கல்யாணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மூன்றாவது முறையாக வந்தேன். இன்று நான்காவது முறையாக வந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில், அவருக்கு அஞ்சலி செலுத்தி அவருடனான இனிப்பான, சுவையான நினைவுகளோடு இருக்கிறேன். அவருடைய நாமம் எப்போதும் வாழ்க” என்று தெரிவித்தார்.