கோடைக்காலம் தொடக்கம் என்பது ஏப்ரல் இறுதியில் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை இருக்கும். இந்த நாட்களில் வெயில் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் கோடை கால நாட்கள் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் கடந்த பிப்வரி இறுதி முதலே தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோடைக் காலத்தை முன்னிட்டு தமிழகத்தை ஆளும்கட்சியான திமுக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுகவின் கிளைகழகத்தினர், மாநகர, நகர பகுதி, வார்டு கழக நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் குடிநீர் பந்தல் அமைக்க வேண்டும், அங்கு இளநீர், தர்பூசணி, மோர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனச்சொல்லி தொண்டர்களை களம் இறக்கியுள்ளது. எதிர்கட்சியான அதிமுகவும் நகரப்பகுதிகளில் குடிநீர் பந்தல்களை அமைத்து மண்பானைகளில் குடிநீர் வைத்துள்ளது.
மண் பானைகளில் குடிநீர் வைப்பதோடு, பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்குவது, மோர் வழங்குவதோடு, கோடைக்காலத்தில் பொதுமக்கள் எப்படியிருக்க வேண்டும் என்கிற துண்டு பிரச்சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழத் துண்டுகள், நீர்மோர் வழங்கிய சோளிங்கர் ரவி, கூடவே கோடைகாலத்தில் பெரியவர்கள் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும், உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்துகொள்ள வேண்டும், மாம்பழம், பப்பாளி பழம் அதிகம் உண்டால் உடல் வெப்பத்தை அதிகரிக்கும், காலையில் வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் உடல் வெப்பத்தை குறைக்கும் போன்ற தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸையும் பொதுமக்களுக்கு தந்தார்.
இதுக்குறித்து நம்மிடம் பேசிய மா.செ சோளிங்கர் ரவி, “தண்ணீர், நீர்மோர், வழங்குவதோடு துண்டு பிரச்சுரம் வழங்கக்காரணம், மக்களிடம் கோடையில் இருந்து தங்கள் உடலை எப்படி காப்பது என்பது குறித்த விழிப்புணர்வில்லை. தமிழ்நாட்டில் அதிக வெப்பமாக உள்ள மாவட்டங்களில் முதன்மை இடத்தில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்றவை உள்ளன. கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் ரஜினி மன்றத்தின் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துண்டு பிரசுரம் வழங்குகிறோம். இதனை எங்கள் மன்றத்தினர், தலைவரின் ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களோடு இருந்து வருகிறார்கள் என்றால் மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என இயங்குகிறார்கள். ரஜினி அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். ரஜினி மன்ற நிர்வாகிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு திமுக, அதிமுக, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மக்கள் அதிசயமாகப் பார்க்கிறார்கள்.