அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 19ம் தேதி வரை மிதமான மழையும் 20ம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.
மேலும் சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.