விருதுநகர் அருகிலுள்ள பாலவநத்தம் கிராமத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரிடம், கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் வரும் ஒரு பாடலைப் பாடிக்காட்டினார், மூதாட்டியான பவுனுத்தாய். சினிமா ரசிகையான பவுனுத்தாய், ராதிகா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறாமல், சினிமா மற்றும் நடிப்பைப் பற்றியே பேசினார்.
பிரச்சார வாகனத்தில் ராதிகாவைப் பார்த்த பவுனுத்தாய், கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய கத்தாழங் காட்டு வழி எனத் துவங்கும் பாடலின் வரியான ‘உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா’ என்று பாடினார். அவர் பாடியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, தான் பிரச்சாரம் செய்ய வந்ததையே மறந்தவராக, மைக்கை பவுனுத்தாயிடம் நீட்டி நேர்காணலே நடத்தினார் ராதிகா.
“ராதிகாவைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை..”என்றார் பவுனுத்தாய். “எதற்காக?” எனக் கேட்டார் ராதிகா. “சினிமாவ ரொம்பவும் பார்ப்பேன். உங்க நடிப்பு எனக்குப் பிடிக்கும்.” எனப் பதிலளித்தார் பவுனுத்தாய். “எந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்?” என ராதிகா கேள்வி கேட்க,“கிழக்குச் சீமையிலே” என பதிலளித்தார் பவுனுத்தாய். வந்த வேலையை மறந்துவிட்டு வாக்காளர் ஒருவரிடம் ஏதேதோ பேசுகிறோமே என்று சுதாரித்த ராதிகா “நான் உங்ககிட்ட ஓட்டு கேட்க வந்திருக்கேன். அது பிடிக்கிறதா?” என்று கேட்க, பவுனுத்தாய் “பிடிக்கும்..” என்றார்.
அவரை விட்டுவிட மனமில்லாத ராதிகா “நான் நன்றாகச் செயல்படுவேன் என்று நம்புகிறீர்களா?” என்று கொக்கி போட்டார். “உங்க மனசப் பொருத்தது..” சாதுர்யமாகப் பேசினார் பவுனுத்தாய். “அப்படி ஒரு எண்ணம், என் முகத்தில்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுதா?” பரிதவிப்புடன் கேட்டார் ராதிகா. ராதிகாவின் கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறாத பவுனுத்தாய், “உழுதபுழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா..” என்று மீண்டும் பாடினார். “அப்படின்னா? உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல..” எனக் கேட்டார் ராதிகா. அதற்கு பவுனுத்தாய் “எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனால், ஆட்சிக்கு வர்றவுங்களுக்கு இருக்கணும்.” என்று கூற, இதை எதிர்பார்க்காத ராதிகா சிரித்து மழுப்பினார்.
தொடர்ந்து ராதிகா “உறுதியாக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்க, “வருவார்..” என்று சுரத்தில்லாமல் பதிலளித்தார் பவுனுத்தாய். அது தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், அங்கு நின்றவர்களைப்பார்த்து “பாகு உன்னாரா?” என்று கேட்டார் ராதிகா. அதாவது, தெலுங்குமொழியில் நலம் விசாரித்தார். பவுனுத்தாயையும் விட்டுவிட மனமில்லாமல், அவர் பக்கம் திரும்பி “சரத்குமாரைப் பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.
உடனே பவுனுத்தாய் “சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம்.” என்று முகம் மலர்ந்தார். “அந்தப் படத்துல நானும் நடிச்சிருக்கேன்.” என்று குஷியாகச் சொன்ன ராதிகா “சரத்குமார் திருமங்கலத்துல பிரச்சாரம் பண்ணுறார்.” என்று கூறிவிட்டு, அடுத்த பாயின்ட்டுக்குக் கிளம்பினார்.
பிரச்சாரம் செய்வதற்கு ஒவ்வொரு வேட்பாளராக, ஒவ்வொரு கட்சியினராக, ஒவ்வொரு பகுதிக்கும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். பலரது உப்புச்சப்பில்லாத பிரச்சார உரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன வாக்காளர்களுக்கு, ராதிகா என்ற சினிமா பிரபலத்தின் முகத்தைப் பார்த்ததும், அவங்களுடன் நேரில் பேசியதும், ஒரு சினிமா ஷூட்டிங்கைப் பார்த்த அனுபவத்தைத் தந்திருக்கும் என்றால் மிகையில்லை என்றனர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.