நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பான இறுதிக்கட்ட பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது கடந்த மாதம் 16 -ந் தேதி பரபரப்பான ஒரு ஆடியோ வெளிவந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இந்த ஆடியோ சம்பந்தமாக தஞ்சையில் முதல் புகார் பதிவானாலும் 2 வது புகார் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் அந்தப் பகுதியில் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களும், தடியடி கல்வீச்சு சம்பவங்களும் நடந்ததால் 144 தடை விதிக்கப்பட்டது. அதனால் அங்கு பதிவான புகாரின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆடியோ வெளியிட்டவர்களை தேடும் பணி தொடங்கியது. மற்றொரு பக்கம் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தது. வாட்ஸ் அப் பில் வெளியிடப்பட்டதால் அதற்காக கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் தலைமை அலுவலகத்தின் உதவியை போலிசார் நாடினார்கள்.
இந்த நிலையில் தான் சிங்கப்பூரில் இருந்து ஆடியோ தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வெளியிடப்பட்டுள்ளதாக விசாரனையில் தெரியவந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரிசக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரை சிங்கப்பூரில் இருந்து இந்திய தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையின் அடிப்படையில் ஆடியோ உருவாக்க ஆலோசனை கொடுத்த பட்டுக்கோட்டை பள்ளிகொண்டான் வசந்த் அன்றே கைது செய்யப்பட்டார்.
அடுத்து ஆடியோவில் பேசிய நபர்களான புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நெரிஞ்சிப்பட்டி சக்தி (எ) சத்தியராஜ், சித்தன்னவாசல் முருகேசன், மற்றும் ஆடியோ வெளியாக இந்திய எண் கொண்ட சிம்கார்டு கொடுத்து உதவியதாக மோசக்குடி ரெங்கையா ஆகியோர் அடுத்தடுத்து சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இன்னும் வீடியோவை வெளியில் பரப்பிய சசி (எ) சசிகுமார் மட்டும் கைது செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில் ஆடியோ வெளியிட்டு கலவரம், மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக செல்வகுமார், வசந்த், சக்தி (எ) சத்தியராஜ், மோசகுடி ரெங்கையா ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த கைது என்பது இது போல கலவரத்தை தூண்டும் விதமாக ஆடியோ, வீடியோ பதிவுகளை வெளியிடும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.