அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத பூரி, வடை, ஆம்லெட் போன்ற உணவுகளைத் தயாரித்து சிலர் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் உள்ள 10 அம்மா உணவகங்களில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி, 5 ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என லிஸ்டில் இல்லாத உணவுகளை தயாரித்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மதிய வேளைகளில் அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து ரசம், ஆம்லேட் என விற்பனை செய்யப்படுகிறதாம்.
ரசம், ஆம்லேட்க்கு தனியாகப் பணம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. சில கவுன்சிலர்கள் ஊழியர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அம்மா உணவகத்திற்கு வரும் கேஸ் மற்றும் உணவு தயாரிக்க வரும் பொருட்களை வைத்து இப்படி லிஸ்டில் இல்லாத பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் ஆகியவற்றை தயாரித்து விற்பதாக கூறப்படுகிறது. இந்த உணவுகளை தயாரிக்க ரேஷன் கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு, உளுந்து, ரவா உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கேட்டால் அதுபோன்று எதுவும் இல்லை. சிலர் அரசியல் உள்நோக்கத்திற்காக இப்படி புகார் தெரிவிக்கின்றனர் எனக் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.