Skip to main content

நடிகர் சங்கத்திற்கு இப்படி பெயர் மாறுகிறதா?

Published on 24/06/2019 | Edited on 24/06/2019


 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 23-ந் தேதி சென்னையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. மொத்தம் 1,579 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

 

nadigar-sangam


இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர், நடிகைகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நடிகர்களுக்காக உருவாக்கப்பட்டதால் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது தனித் தனியாக சங்கங்கள் செயல்படுவதால், சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரே இருக்கலாம் என்றும் சிலர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை கடந்த தேர்தலின்போதே எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜயகுமார், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 'தமிழ்தாய் நடிகர் சங்கம்' என பெயர் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இதனை அவர்கள் செயற்குழுவில் பேசி முடிவு எடுக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். 
 

நடிகர் விவேக் பேசும்போது, கலைஞன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவன்தான். அவர்கள் தாய் மொழியில்தான் நடிக்க வேண்டும் என்பது கிடையாது. 'தமிழ்தாய் நடிகர் சங்கம்' என வைத்தால் கூட சந்தோஷம்தான் என்றார். 
 

பெரும்பாண்மையானோர் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம். மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்குமெனில் பெயரை மாற்றலாம் என்றார் கமல். 
 

இந்த சங்கத்தில் நடிகர் ராஜ்குமார் இருந்தார், நடிகர் நாகேஸ்வரராவ், என்.டி.ஆர் என எல்லோரும் மெம்பராக இருந்தனர். நான்கு மொழி நடிகர்கள் இந்த சங்கத்தில் இருநதனர். அதையெல்லாம் நாம் மனதில் வைத்திருந்தோம் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கலாம் என நினைக்கிறேன் என்றார் பிரபு. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கருங்காலி மாலையின் பின்னணி என்ன? களத்தில் இறங்கிய நக்கீரன் - ஆச்சரியப்படுத்தும் தகவல்

Published on 19/10/2023 | Edited on 20/10/2023

 

Surprising findings from Nakkheeran field study on ebony garland

 

அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள் உட்படப் பலதரப்பட்ட  மக்களும் கடந்த சில மாதங்களாகவே கருங்காலி மாலையைப் போட்டி போட்டுக்கொண்டு அணிந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு கருங்காலி மாலைகளை அணிவதற்கு என்ன  காரணம் என்பதை அறிய விசாரணையில் இறங்கினோம்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோவில் உள்ளது. இக்கோவில் மற்ற கோவில் போல் இல்லாமல் பூமிக்கடியில் 16 அடி ஆழத்தில் செம்பு உலோகத்தால் முருகன் காட்சியளிப்பதால் பாதாள செம்பு முருகன் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுபோல் இக்கோவிலில் மற்ற முருகன் கோவில்களுக்கு மாலை அணிவிப்பது போல் இந்த செம்பு முருகனுக்கு மாலையெல்லாம் அணிவித்து பூஜை செய்வது கிடையாது. அதற்குப் பதிலாக கருங்காலி மாலையை அணிவித்து தான் பூஜையே செய்வார்கள். அப்படி பூஜை செய்த கருங்காலி மாலையைத்தான் முருக பக்தர்களுக்கும் வழங்கி வருகிறார்கள். அதனால் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.      

 

பாதாள செம்பு முருகனுக்கு பூஜை செய்யப்பட்ட கருங்காலி மாலையை அணிவிப்பதின் மூலம் ராகு - கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். அதுபோல் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், சொத்துக்களும் சேரும். குலதெய்வங்கள் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுபோல் உடல் நலத்திற்கும் நல்லது. அதனாலேயே முருக பக்தர்கள் உள்படப் பலதரப்பட்ட  மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகிறார்கள். இதில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, தனுஷ், சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐயா வீரமணி உட்பட நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினருமே கருங்காலி மாலையை ஆர்வமாக வாங்கி அணிந்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கருங்காலி மாலைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.

 

அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களிடம் செம்பு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட கருங்காலி மாலை என்று கூறி ரெட்டியார்சத்திரம், ஸ்ரீராமபுரம், மூலச்சத்திரம், திண்டுக்கல் உட்பட சில பகுதிகளில் நின்று கொண்டு மூன்றாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை போலியான கருங்காலி மாலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தினசரி 300க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் போலியான கருங்காலி மாலையை வாங்கிச் சென்று பல ஆயிரங்களை இழந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட கருங்காலி மாலைகள் ஒரு சில  நாட்களிலேயே கலர் போய் வெளுத்து விடுகிறது. அந்த அளவுக்கு சாயம் கலந்த போலி கருங்காலி மாலையை பக்தர்களுக்கு கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் ஒரிஜினல் கருங்காலி மாலை கருநிறத்தில் சாயம் போகாமல் இருக்கும் என்றனர் அப்பகுதியைச் சேர்ந்த  பாதாள செம்பு முருகன் பக்தர்கள் சிலர்.  

 

Surprising findings from Nakkheeran field study on ebony garland
அறிவானந்த சுவாமி

 

இது சம்பந்தமாக பாதாள செம்பு முருகன் கோயிலின் அறங்காவலர் அறிவானந்த சுவாமிகளிடம் கேட்டபோது, “இறைவனுக்கு எப்படி பூ மாலைகள் சாத்தி வழிபடுவது வழக்கமோ, அதுபோல பாதாள செம்பு முருகனுக்கு தொன்றுதொட்டு செவ்வாய் பகவானுக்கு உரிய கருங்காலி மாலைகளை பூஜை செய்து பக்தர்களுக்குக் கொடுத்து வருகிறோம். ஒரிஜினல் கருங்காலி குச்சிகளை வெளிநாடான ஆப்ரிக்கா மற்றும் அரியானா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து வாங்கி கருங்காலி மாலையாக தயார் செய்து முருகனுக்கு பூஜை செய்த பின் பக்தர்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறோம். அதிலேயும் உடல்  ஊனமுற்றோருக்கு இலவசமாக கொடுத்து வருகிறோம். இந்த கருங்காலி மாலைகளைப் பக்தர்கள் அணிவதன் மூலம் உடல்நலத்தில் எந்த ஒரு நோய் இருந்தாலும் அதைத் தீர்க்கக்கூடிய  சக்தியாக இருந்தும் வருகிறது. அதனால் பக்தர்கள் ஆர்வமாக கருங்காலி மாலையை வாங்கி வருகிறார்கள். ஆனால் பக்தர்கள் அதிகமாக வருவதால் கருங்காலி மாலையை பூஜை செய்து கொடுப்பதில் குறைந்தது 18 மணி நேரமாவது தேவைப்படுகிறது. ஆனால் எங்களால்  கருங்காலி மாலையை பூஜை செய்யாமல் கொடுக்கவும் முடியாது. 

 

காலப்போக்கில்  உடனடியாக பக்தர்களுக்கு கருங்காலி மாலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அதனால் தான் பக்தர்களுக்கு கருங்காலி மாலை பூஜை செய்வதில் காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் சில பக்தர்கள் மன வருத்தமும் அடைகிறார்கள். இப்படிப்பட்ட  பக்தர்கள் ராமலிங்கம்பட்டி ஊர் எல்லையில் இருந்து எல்லப்பட்டி வரை அமைதியாகச் சென்று போனாலே கருங்காலி மாலைகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் கிடைக்கும். ஆனால் கருங்காலி மாலைகள் உடனே பக்தர்களுக்கு கிடைக்காததால் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பலர் போலியான கருங்காலி மாலைகளை பக்தர்களிடம் கொடுத்து ஏமாற்றி பல ஆயிரங்களை தினசரி சம்பாதித்தும் வருகிறார்கள். இதற்கு எங்கள் கோவில்  நிர்வாகம் பொறுப்பு கிடையாது. கோவிலைத் தவிர எங்கும் கருங்காலி மாலை விற்பனை செய்வது கிடையாது. அதனால் பக்தர்கள் போலியை நம்பி ஏமாறாதீர்கள்” என்று கூறினார்.

 

 

Next Story

போதைப்பொருள் வழக்கு - நீதிமன்றத்தை நாடிய நவ்தீப்?

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

actor navdeep case update

 

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, ஹைதராபாத் போதைப்பொருள் போலீசார் மாதப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தினர். அங்கு விலையுயர்ந்த போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட திரைப்பட பைனான்சியர் வெங்கடரத்னா ரெட்டி, பாலாஜி மற்றும் முரளி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். 

 

விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் நடிகர் நவ்தீப் மற்றும் தயாரிப்பாளர் ரவி ஆகியோர் பெயரைச் சொல்லியுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த், இந்த வழக்கில் நவ்தீப் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், நடிகர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறினார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த நவ்தீப், "அது நான் இல்லை. தயவுசெய்து தெளிவு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதையடுத்து நவ்தீப், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை எனவும் கைது செய்யவுள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்பு அவரைக் கைது செய்ய வேண்டாம் என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நவ்தீப் அறிந்தும் அறியாமலும், ஏகன், இது என்ன மாயம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 

 

கடந்த 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில், 10 திரைப் பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் நவ்தீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.