Skip to main content

அரசுப்பள்ளியில் படித்ததற்காக மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கினால் கல்வித்தரம் பாதிக்கும்! – மத்திய அரசு பதில் மனு!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Providing reservation in medical studies for public school education will affect the quality of education! - Federal Government Reply Petition!

 

அரசுப் பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மருத்துவக் கல்வியில்  இட ஒதுக்கீடு வழங்கினால், அது  கல்வித் தரத்தையே பாதிக்கும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

 

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக  புதுவை அமைச்சரவை முடிவு செய்து, துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. துணைநிலை ஆளுநர், அமைச்சரவையின் முடிவில் உடன்படாததால், கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பி வைத்தார்.

 

இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு முடித்த மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி என்பவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

அதில்,கடந்த 2016 -17 ம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளியில் பயின்ற 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளதாகவும், ஆனால்,  தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 243 பேர் முதல் 402 பேர் வரை  மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் பதில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் உள்துறை அமைச்சகத்தின் பரீசீலனையில் உள்ளது. முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதால், இந்த விவகாரம் மத்திய குடும்ப நல அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவர்களின் ஆலோசனைகளை நாடியுள்ளோம். ஒரே நாடு,  ஒரே மெரிட் என்ற அடிப்படையில்,  மருத்துவப் படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த, கடந்த 2016ஆம் ஆண்டு நாடு முழுவதும் நீட்தேர்வு கொண்டு வரப்பட்ட நிலையில், அரசுப் பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அத்தகைய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால், அது கல்வித் தரத்தைப் பாதிக்கும். தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இந்தக் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்த வாய்ப்பு குறைவு என்றும், விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமெனவும் கோரினார். மாணவ, மாணவிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘மத்திய அரசு காலம் கடத்தி வருவது மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும். மாநில அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதென உச்சநீதிமன்றம் வெவ்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2016-ல் இருந்து தற்போது வரை, புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்குக்கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை’ என்று சுட்டிக்காட்டினார்.

 

தொடர்ந்து, 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்