தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 - 2017 காலக்கட்டத்தில் முறைகேடாக பேராசிரியர்கள் நியமனம் செய்ததாக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன், பதிவாளர் முத்துக்குமார் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் கடந்த 2015 - 2017ம் ஆண்டு வரை துணை வேந்தராக ஜி.பாஸ்கரன் பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் தகுதியற்றவர்களை, விதிமுறைகளை மீறி பேராசிரியர் பணிகளில் நியமனம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள மதுரை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதையடுத்து கடந்த 14ம் தேதி முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் துணை வேந்தர் ஜி.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், பதிவாளரின் நேர்முக உதவியாளர் சக்தி சரவணன் மற்றும் தொலைத்தூர கல்வி இயக்கத்தின் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் மீது 11 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட ஆராய்ச்சிக்காக எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கி பல்கலைக்கழகத்தை தொடங்கினார். ஆனால் அந்த பல்கலைக் கழகம் ஊழலில் சிக்கித் தவிப்பது தமிழ் ஆய்வாளர்களையும், ஆர்வலர்களையும் தற்போது வேதனையில் ஆழ்த்தியுள்ளது.