Skip to main content

முட்டுக்கட்டை போடும் தனியார் பள்ளி நிர்வாகம்... வேதனையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்...

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப்பள்ளிகளுக்கு ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புகிறதோ இல்லையே  வழக்கம் போல ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வை அறிவித்து நடத்தி வருகிறது. 

 

2019 ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28 ந் தேதி அறிவித்தது. இணையவழி விண்ணப்பம் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தேர்வு நடக்கும் தேதியை திடீரென இன்று அறிவித்துள்ளது. அதாவது ஜூன் 8 ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள் 1 க்கும், 9 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள் 2 க்கான தேர்வுளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

tet

 

இந்த நிலையில்தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் படிக்காமல் எப்படி தேர்வு எழுதுவது என்று நொந்து வருகிறார்கள்.

 

தனியார்பள்ளி ஆசிரியர்கள் கூறுவதோ..

 

அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவு எங்களுக்கும் உண்டு. தேர்வு வாரியம் தேர்வு எப்பொழுது அறிவிக்கும் என்று காத்திருந்தோம். இந்நிலையில் பிப்ரவரியில்  தேர்வு அறிவித்தார்கள் விண்ணப்பித்தோம். அந்தவேளையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியது. அதற்காக நாங்கள் படிக்க முடியவில்லை. மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விட்டாச்சு. அப்பறமாவது படிக்கலாமா என்றால் நாங்கள் வேலை செய்யும் தனியார்பள்ளி நிர்வாகங்கள் எங்களை படிக்க விடவில்லை.

 

 

அதாவது கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு விடுமுறை ஆனா எங்களுக்கு ஊர் ஊராக போய் வீட்டுக்கு வீடு சென்று பள்ளிகளின் விளம்பர துண்டறிக்கைகளை கொடுத்து குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேருங்கள் என்று பெற்றோர்களையும், மாணவர்களையும் மூளை சலவை செய்யும் பணி கொடுத்திருக்கிறார்கள்.

 

 

வழக்கம் போல பள்ளிக்கு போய் விளம்பர துண்டறிககைகளை எடுத்துக்கொண்டு பள்ளி வேனில் ஏறி ஊர் ஊராக போய் இறக்கி விடுவாங்க. வீடு வீடாக நடந்துட்டு மாலை வீட்டுக்கு வரனும். அப்பறம் எப்படி நாங்க தகுதி தேர்வுக்கு படிக்க முடியும். தனியார் பள்ளி நிர்வாகங்கள் எங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டு தடுக்கிறார்கள் என்றனர் வேதனையாக.

 

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு கூடாது என்று சொன்ன அரசாங்கம் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களை பிடிக்க ஊர் ஊராக செல்வதை தடுக்க ஒரு உத்தரவு போட்டால் இன்னும் 20 நாளிலாவது கொஞ்சம் படித்து தேர்வுக்கு தயாராவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்