விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், சனிக்கிழமை மாலை, பணிகளை முடித்துக்கொண்ட வங்கி ஊழியர்கள், ஷட்டரை இறக்கி, பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கள்கிழமை காலையில் வங்கி ஊழியர் கார்த்திக் என்பவர் வங்கியைத் திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது, வங்கியின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்தி, வங்கி அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். உடனடியாக வங்கி அதிகாரிகள், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வங்கியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும், பணம் வைத்திருந்த இரண்டு லாக்கரையும் காணவில்லை. இதையடுத்து வங்கியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில், பதிவான காட்சிகளை ஆய்வு செய்யச் சென்றனர். ஆனால், கேமரா காட்சிகள் பதிவு செய்யப்படும் ஹார்டு டிஸ்குகள் காணவில்லை.
காணாமல் போன இரண்டு லாக்கரில், 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வழக்கில், துப்பு துலக்குவதற்கு விழுப்புரத்தில் இருந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, வங்கியில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது, யாரையும் பிடிக்கவில்லை. காவல்துறை தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுத் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பணி முடிந்து வங்கியைப் பூட்டிச் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அன்று நள்ளிரவில், வங்கியில் ஷட்டர் பூட்டை உடைத்து வங்கிக்குள் சென்று, பணம் வைத்திருந்த இரண்டு லாக்கர்களையும் தூக்கிச் சென்றுள்ளனர். மேலும், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போலீசிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது, என்பதற்காகக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் அழித்ததோடு, ஹார்டு டிஸ்குகளையும் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அந்த வங்கியின் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு, மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.