காகிதம், அச்சு மூலப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. மேலும், இதற்கான ஜி.எஸ்.டி வரி 18% வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், காகிதம், அச்சு மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், ஜி.எஸ்.டி. வரியை 18% என இருப்பதை மாற்றி 12% என குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் சார்பில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் என்பது தமிழ்நாடு முழுவதும் 30 சங்கங்களை உள்ளடக்கியது. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது வரலாறு காணாத வகையில் காகிதம் மற்றும் அச்சு மூலப்பொருட்களின் விலை 150 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2021ம் ஆண்டு ரூ.40 ஆயிரமாக இருந்த 1 மெட்ரிக் டன் பேப்பர் தற்போது ரூ.95 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மேலும் காகித தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நோட்டு மற்றும் புத்தகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் சார்பில் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில், காகிதம் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல். அச்சுத் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி 5 முதல் 12 சதவிகிதம் என்ற நிலையில் இருந்து தற்போது 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளதை குறைக்க வேண்டும். அச்சகங்கள் அனைத்தையும் சேவை என்ற நிலையில் இருந்து உற்பத்தியாக மாற்ற வேண்டும். உற்பத்தியாளராகப் பதிவு செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். காகிதம் மற்றும் அச்சு மூலப்பொருட்களின் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய விலை ஏற்றத்தை வர்த்தக பொது இயக்குநரகம் மூலமாக கட்டுப்படுத்த வேண்டும். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது தமிழகம் தழுவிய போராட்டமாக உள்ளது. பிறகு நாடு தழுவிய போராட்டமாக மாறுவதற்குள் மத்திய அரசு பரிசீலித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், செயலாளர் செந்தில்குமார், ராஜேந்திரன், ஜாகிபீட்டர், சுந்தர், துரைக்குமணன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அச்சக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.