தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். டி.ஆர்.பி.ராஜாவிற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் வரும் 11 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டி.ஆர்.பி.ராஜா பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது துறைகள் மாற்றப்பட்டு அமைச்சர்களுக்கு மாற்றுத் துறைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி அமைச்சராகப் பதவியேற்க இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில்நுட்பத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு ஒதுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.