Skip to main content

ரேஷன் கடைகள் முன்பு இடையூறாக ஆளுங்கட்சியினரின் பேனர்கள்! - தி.மு.க. தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

pongal gift tn govt dmk party chennai high court

 

பொங்கல் பரிசு டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்ட நிலையில், ரேஷன் கடைகள் முன்பு ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக வழக்கு தொடர அனுமதி கோரி, தி.மு.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, 2,500 ரூபாய், அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கன்களில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும் கூறி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

அப்போது தமிழக அரசுத்தரப்பில், இரு மாவட்டங்களில் மட்டும் ஆர்வ மிகுதியால் கட்சியினர் இதுபோல அச்சிட்டுவிட்டதாகவும், அனைத்து இடங்களிலும் அதிகாரப்பூர்மாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கவேண்டும் எனவும், சுற்றறிக்கை பிறப்பிப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் சுற்றறிக்கையும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பின் உத்தரவாதத்தைப் பதிவு செய்து, டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்டது.

 

இந்தப் பின்னணியில், தலைமை நீதிபதி அமர்வில் தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வழக்கு தொடரவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து அரசுத்தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து, தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி அனுமதியளித்தது.
 

சார்ந்த செய்திகள்