திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கீழக்கோவில்பட்டி கிராமத்தில் பல தலைமுறையாக பொங்கல் பண்டிகை முடிந்து தை திருமகளை வழியனுப்பும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டும் தமிழ் பண்பாடு படி இந்த கிராம மக்கள் மார்கழி மாதங்களில் வாசலில் கோலமிட்டு நடுவில் பூசணி பூ வைப்பது வழக்கம். நாள்தோறும் வைக்கப்படும் பூசணிப் பூக்களை சாணத்தில் ஒட்டி எருவாட்டியாக தயார் செய்து வைத்து விடுவர். பொங்கல் பண்டிகை முடிந்ததும் தை திருமகளை வழியனுப்பும் விதமாக பூஜைப் பொருட்களுடன் பூ எருவாட்டியையும் சேர்த்து ஊர்வலமாக எடுத்து வருகின்றனர்.
பின்னர் ஊர் முச்சந்தியில் வைத்து பாட்டுப்பாடி, கும்மியடித்து, குலவை இடுகின்றனர். இந்தப் பாரம்பரிய பழக்க வழக்கங்களை தங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத் தரும் விதமாக குழந்தைகளையும் குலவையிட்டு கும்மியடிக்க வைக்கின்றனர்.
பின்னர் மருதாநதி ஆற்றுக்கு ஊர்வலமாக செல்லும் கிராம மக்கள் ஆற்றங்கரையில் கிராம தெய்வங்களுக்கு பூஜை செய்கின்றனர். அங்கு ஓடும் தண்ணீரில் எடுத்துவரப்பட்ட பூ எருவாட்டியின் மீது தீபமேற்றி ஆற்றில் விடுகின்றனர். தங்கள் முன்னோர்கள் கற்றுத்தந்த பாரம்பரியங்களை விட்டு விடாமல் பாதுகாக்க தொடர்ந்து இத்திருவிழாவை நடத்தி வருவதாக கூறுகின்றனர் கீழக்கோவில்பட்டி கிராமத்துப் பெண்கள்.