திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர காவல்நிலையம் என்பது புதியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. காவல்நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டப்பட்டது போக சுற்றிலும் அதிக இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் முள்செடிகள், புல்செடிகள் முளைத்து இருந்தன. இதனால் பாம்பு, பல்லி, பூரான் போன்ற விஷ உயிரினங்கள் அந்த பகுதியில் மேய்ந்துக்கொண்டு இருந்தன. இதனால் காவல்நிலைய அதிகாரிகளும், காவலர்களும் அதிக தொந்தரவுக்கு ஆளாகினர்.
வாணியம்பாடி நகர ஆய்வாளர் சந்திரசேகர்க்கு திடீரென ஒரு ஐடியா வந்தது. ஆட்களை வைத்து காவல்நிலையத்தை சுற்றி சீர் செய்ய வைத்தவர், அப்படியே சிறிய ட்ராக்டர் மூலமாக உழுது அங்கு கத்தரி, தக்காளி, மிளகாய் செடிகளை வாங்கி வந்து முழுவதும் நடவு செய்ய வைத்துவிட்டார். இனி காலையில் பணிக்கு வரும் காவலர்கள் அந்த தோட்டத்துக்கு நீர் பாய்ச்சவதையும், மாலையில் இரவு பணிக்கு வரும் காவலர்கள் ஒருமுறை நீர் பாய்ச்சுவதை என முடிவு செய்துள்ளனர். அடசலாக கிடந்த பகுதியை சுத்தம் செய்து, செடிகளை நட்டதை காவல்நிலையத்துக்கு வருபவர்கள் பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர்.