இன்று சட்டப் பேரவையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக " ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்". என அறிக்கையில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் உச்சபட்சமாக பொதுமக்கள் மீது சூப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு பற்றியும் அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் "மக்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு, வேட்டையாடுவது போல் பொதுமக்களைச் சுட்டுத்தள்ளியுள்ளார். மனிதத் தன்மை சிறிதும் இன்றி தலையின் பின்புறம், இதயம், தலை எனத் துப்பாக்கிச்சூடு முழுவதும் உயிரை எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். காலில் சுட வேண்டும் என்பதை அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை". என்று கடுமையான வார்த்தைகளால் ஆணையம் பதிவு செய்துள்ளது.