இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.
காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.
அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.