தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருடைய பெற்றோர், கோவையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் சிறுமி, அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வந்தார். பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, படிப்பை பாதியிலேயே கைவிட்டு, பாட்டி வீட்டில் இருந்து வந்தார். உள்ளூரைச் சேர்ந்த வினோத் (22) என்ற வாலிபரும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வினோத்தும் - சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர். அதன் பிறகு ஓரிரு முறை அவர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தரப்பில் இருந்து நெருக்கடி அதிகமானதால் அவரை அழைத்துச் சென்று கடந்து ஜூலை 18 ஆம் தேதி பவானி கூடுதுறையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ள சிறுமிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வினோத் அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் விசாரணையில்தான் சிறுமிக்கு 15 வயதே ஆகியிருக்கிறது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் அரூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவாகிவிட்ட வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.