ஓமலூரில் பள்ளி மாணவ மாணவிகள் முன்பு தரையில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக எம்எல்ஏ அருள் கலந்து கொண்டார். அதன் பிறகு மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி ராஜ் என்பவர் தங்கள் தரப்பு நிர்வாகிகளை நிகழ்ச்சியில் பேசவிடாமல் தடுத்ததாக கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
திடீரென பாமக எம்எல்ஏ அருள், திமுக உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பேசட்டும் என தெரிவித்ததோடு நடந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என அங்கிருந்த மாணவ மாணவிகள் முன்பு தரையில் விழுந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 'நான் அரசியல் பண்ண விரும்பல. நான் கட்சிக்காரனாக பேசவில்லை. உங்களை அசிங்கப்படுத்தி, அவமரியாதை கொடுத்திருந்தால் என்னை மன்னிச்சிருங்க' என்று கீழே விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.