மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான இரு விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டன. அதாவது சென்னையில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் என இரு விமானங்கள் மதுரைக்குப் பயணிகளுடன் வந்தன. மதுரையில் தரையிறங்க வேண்டிய நிலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தன.
இதனையடுத்து இந்த இரண்டு விமானங்களும் வானில் வட்டம் அடித்துக் கொண்டிருந்தன. ஒரு இதில் ஒரு விமானம் திருமங்கலத்தை நோக்கியும், மற்றொரு விமானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை நோக்கியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்துக் கொண்டிருந்தன. அச்சமயத்தில் மதுரைக்கு அருகில் உள்ள விமான நிலையங்களான திருச்சி அல்லது தூத்துக்குடி விமான நிலையங்களில் இந்த இரு விமானங்களும் தரையிறங்க வாய்ப்பு உள்ளதாக விமான நிலையம் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இரு விமானங்களும் மதுரையில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டன.
முன்னதாக கடந்த 11ஆம் தேதி (11.10.2024) திருச்சியில் இருந்து பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா புறப்பட்டுச் செல்ல முயன்றது. அப்போது மேலெழும்பிய விமானத்தின் சக்கரங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாததை விமான ஓட்டிகள் கண்டறிந்தனர். இதனால் விமானிகள் மீண்டும் திருச்சி கிளம்பி விமானத்தைத் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விமானம் வானில் தொடர்ந்து வட்டம் அடித்துக் கொண்டிருந்த நிலையில் பத்திரமாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.