திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி காட்சி தொடர்பியல் துறை சார்பாக இன்று காலை ‘இந்தியாவைக் கொண்டாடுவோம்’ (Celebrating India) என்ற தலைப்பில் புகைப்பட மற்றும் ஓவிய கண்காட்சி, புகைப்பட பயிற்சி பட்டறை நடைபெற்றது. கண்காட்சியை கல்லூரி முதல்வர் ஜூலி திறந்து வைத்தார் கல்லூரி இதழான ‘ஈ.வி.ஆர். டைம்ஸ்’ (EVR TIMES) வெளியிடப்பட்டது. இக்கண்காட்சியில் காட்சித்தொடர்பியல் துறை மாணவர்களின் 127க்கும் அதிகமான புகைப்படங்களும், 65க்கும் அதிகமான ஓவியங்களும் இடம்பெற்றன.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ‘டெக்கான் க்ரொனிக்கல்’ பத்திரிகையின் மூத்த புகைப்பட நிருபர் சாமுவேல், “சின்னச்சின்ன விஷயங்களுக்காக வேலையை தள்ளிப்போடாதீர்கள், எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருங்கள், எப்போதும் ஒரு மாணவராகவே இருங்கள், அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும், நிறைய கற்றுக்கொள்ள முடியும். நாம் அனைவரும் கேமிரா போல் இருக்கவேண்டும். ஏனென்றால் கேமிரா முன்பு அனைவரும் ஒன்றுதான், கேமிராவுக்கு ஜாதி, மதம், இனம் போன்ற எந்த வேற்றுமைகளும் கிடையாது” என்று கூறினார். தான் எடுத்த சிறந்த புகைப்படங்களை மாணவர்களுக்கு காண்பித்து அது எடுக்கப்பட்ட சூழல், மற்றும் அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் துறைத்தலைவர் பிளெஸ்ஸி, உதவிப்பேராசிரியர்கள் செந்திலாதேவி, பிரபா, கோபால், இந்துஜா, உட்பட பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த துறை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கல்லூரிகளின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.