பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏராளமான மக்கள் புத்தாடைகளையும், நகைகளையும் வாங்குவதற்காக பல இடங்களில் அலைமோதி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேறி அலைமோதிய சம்பவம் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சேக்குப்பேட்டை பகுதியில் ஒரு பிரபல ஜவுளிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த கடைக்கு வார இறுதி நாளான இன்று புத்தாடைகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் வந்துள்ளனர். இந்த நிலையில், தொலைபேசி மூலம் இந்த கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு வந்த காவல்துறையினர் கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். மேலும், அந்த கடையினை சுற்றி இருந்த அனைத்து மக்களையும் 200 மீட்டர் தூரத்திற்கான பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால், அங்கு இருந்த மக்கள் அலறி அடித்து பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றனர். இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.